ரேசன் கடையில் மண்ணெண்ணைக்காக வரிசையில் காத்திருந்த காலம் போய், பரீட்சை முடிவுகளுக்காய் பத்திரிக்கை நிலையங்களில் காத்திருந்த காலம் போய், பிள்ளைகளை சிறந்தக் கல்லூரியில் சேர்க்க ஊர் ஊராகத் திரிந்து விண்ணப்பங்களை வாங்கினக் காலம்போய், பேருந்து பயணமோ, ரயில் பயணமோ முன்பதிவுகளுக்காக வரிசையில் காத்துக்கிடந்த காலம்போய், அனைத்தையுமே இன்று ஆன்லைனில் ஆர்டர் செய்து சுலபமாக வாங்கி விடுகிறோம். நாம் எழுதிய கடிதங்களுக்கு பதில் வருமா வராதா என்று காத்துக்கிடந்த காலம் போய் இன்று உடனடியாக குறுஞ்செய்தி மூலம் செய்தி பரிமாற்றங்கள். அது மட்டுமா எங்கு வந்துகொண்டிருக்கிறோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை எங்கிருந்தும் கண்காணிப்பதற்குக் கூட இன்று புதுப்புது செயலிகள் வந்துவிட்டன. அப்பப்பா! என்ன நுண்ணறிவு நுட்பங்கள்!
அன்றே இந்த செயலிகள் இருந்திருந்தால் (யாத்திராகமம் 32:1) மோசே மலையிலிருந்து இறங்கி வர தாமதம் ஏன்? என்பதை இந்த கண்காணிப்புச் செயலிகள் மூலமாக அறிந்து அமைதியாக இருந்திருப்பார்கள் இஸ்ரவேல் ஜனங்கள்.
மலையிலிருந்து புகை, இடிமுழக்கம் போன்ற தேவனுடைய வார்த்தைக்கு பயந்து நடுங்கி, மோசே! மோசே! மலைக்கு கீழே நீர் குறித்த இந்த எல்லைக்கோட்டை நாங்கள் தாண்டவே மாட்டோம், பரிசுத்தத்தோடு ஆயத்தமாயிருப்போம், நீங்கள் போய் தேவனுடைய வார்த்தைகளை எங்களுக்காக வாங்கி வாருங்கள் என்றுதானே வழியனுப்பி வைத்தீர்கள். அதற்குள் என்ன அவசரம்! ஆம்! நாம் காத்திருக்கக் கூடாதபடி ஏவாளை ஏமாற்றி, விலக்கப்பட்ட கனியைப் அன்று புசிக்க வைத்த அதே பிசாசே இன்றும் நம்மை அவசரப்படுத்துகிறது என்பதில் கவனம் தேவை!
என்ன அப்படி நம்மை அவசரப்படுத்துகிறான் என்று நினைக்கிறீர்களோ? இயேசு வருகிறார்! வருகிறார்! என்று கேட்டு கேட்டு புளிச்சு போச்சு! என்று ஒரு கூட்டம் பரிகசிக்கிறார்கள், அவர் வந்தாலென்ன? வராவிட்டாலென்ன? ஏதோ அறியாத வயதில் தெரியாமல் ஏதேதோ செய்திகளைச் சொல்லி நம்மை பயங்காட்டிவிட்டார்கள் என்று அசட்டை செய்யும் இன்னொரு கூட்டம். சரி இனி மாற்றி யோசிப்போம் என்று நினைக்கத் துவங்கினது இப்போதல்ல, எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து, பயங்கரமான வாதைகளால் பார்வோனை பிரமிக்கப்பண்ணி, செங்கடலை பிளந்து, மன்னாவை பொழிந்து தனக்கென்று ஒரு பரிசுத்தக் கூட்டத்தை தெரிந்தெடுத்து, அவர்களை கானானுக்கு கொண்டுசெல்லும் மாபெரும் திட்டத்தின் பாதையிலே, அவர்களுக்கான வாழ்வின் நெறிகாட்டுதலை பெற்றுக்கொள்ளுவதற்காக, தேவனிடம் ஏறிச்சென்ற மோசே திரும்பி வர தாமதித்ததினால் அங்கிருந்த இஸ்ரவேல் ஜனங்களும் அப்படியே மாற்றி யோசிக்கலாயினர்.
என்ன அப்படி மாற்றி யோசித்துவிட்டார்கள்... தலைவன் மோசே மலையிலிருந்து திரும்பி வரத் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. ஆகவே ஆரோனாகிய நீ இனி எங்களை வழிநடத்து என்று ஆணையிடுவதற்கு பதிலாக, எங்களை வழிநடத்தும் தெய்வங்களை உண்டு பண்ணு என்று தேவனையே மாற்றத் துணிந்துவிட்டனர் இந்த இஸ்ரவேல் ஜனங்கள். மனந்திரும்பு! பரிசுத்தப்படு! ஆயத்தப்படு! என்ற பிரசங்க வார்த்தைகளையே கேட்டு கேட்டு பயந்து, நடுக்கத்தோடு கைகளை கட்டி நிற்கவைத்து, நம்மை இத்தனைகாலம் ஏமாற்றிவிட்டார்கள். உங்கள் பணத்தை கொடுங்கள், நகைகளை கொடுங்கள் அதினாலே நமக்கு தெய்வத்தை உண்டுபண்ணுவோம் அது நமக்கு அளவில்லாத ஆசீர்வாதங்களை தரும் வல்லமையுள்ளது. என்ன...... ஏதோ பொருளாசையான விக்ரக வழிபாட்டைத் தேடுகிறோமோ என்று நீங்கள் சிந்திப்பதென்ன (எபேசியர் 5:5) நாம் கர்த்தருக்கே பண்டிகையை ஆசரிப்போம் வாருங்கள். இயேசு ஜீவிக்கிறார் அல்லது இயேசு ஆசீர்வதிக்கிறார் என்ற தலைப்பிலேயே நாம் ஆராதனை நடத்தலாம் ஆனால் அமைதியாக அமர்ந்திருந்து ஆராதிப்பதல்ல, நீங்கள் விரும்பியபடியே ஆர்ப்பாட்டத்தோடு குடித்து, புசித்து, கும்மாளம் போடலாம் வாருங்கள் என்று ஆரம்பித்த ஆட்டம் கடைசியாக அவர்களின் ஆடையையும் அரைகுறையாக்கி இல்லை இல்லை முழு நிர்வாணமாக்கி வைத்திருந்தது வஞ்சகப் பிசாசு! (யாத்:32:5,6,25)
நாமும் அப்படித்தானே கி.பி.இரண்டாயிரத்தில் இயேசு வந்துவிடுவார் என்று சொன்னார்கள் ஆனால் 2023ம் வருடமும் முடியப்போகிறது. அவர் இனி வந்தாலென்ன? வராவிட்டாலென்ன? இந்த பூமியில் கிடைத்த இந்தப் பொன்னான வாழ்வை நாம் ஏன் வீணடிக்கவேண்டும். உலகத்தை நேசிப்பவர்கள் எப்படியெல்லாம் உடுத்துகிறார்கள், உல்லாசமாயிருக்கிறார்கள், நாம் என்ன? பாவமா செய்யப்போகிறோம். எப்படியாவது இயேசுவை பிரதிபலிக்கவேண்டும் அவ்வளவுதானே என்று, இடிமுழக்கம் போன்ற இசைகளுக்கு நடுவில், அற்புதமான ஒளிவிளக்குகளின் வண்ணத்தில், ரசிகர்களின் ஆர்பாட்டங்களுக்கு நடுவே தங்களை பிரதிபலிக்கும் சினிமா நட்சத்திரங்களை போன்று, இயேசுவை பிரதிபலிக்கப்போகிறோம் என்று இன்றைய ஊழியர் பட்டாளங்களும் ரசிகர்களின் ஆர்பாட்டங்களுக்கு நடுவில் இல்லை இல்லை விசுவாசிகளின் அல்லேலூயாவுக்கு நடுவில் வண்ண வண்ண விளக்குகளின் ஒளிவௌ்ளத்தில் தங்களை பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார்கள். சர்வ வல்லவரின் மகத்துவத்தை வர்ணஜால விளக்குகளின் மாய வித்தைகளுக்குள்ளும், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை ஒளி விளக்குகளுக்கு நடுவே விடும் புகையின் வழியாகவும் திருப்திபட வைத்துவிட்டான் வஞ்சக சாத்தான்!
இச்சையடக்கம் வேண்டாம் நீங்கள் இச்சித்ததையெல்லாம் பெற்றுக்கொள்ளுங்கள்; (1கொரி:9:25, 2பேது:1:4,6), கோவிலை கொள்ளையிடுங்கள் (ரோமர;:2:22), கள்ளத்தராசால் கல்லாவை நிரப்புங்கள் (ஓசியா:12:7, நீதி:20:23), அநியாயமாய் சம்பாத்தியம் பண்ணுங்கள் (எரே:17:11, லூக்:3:14, நீதி:28:8, நீதி:16:8), பணம் கொடுத்தாவது காரியத்தை சாதியுங்கள் (ஆமோஸ்:5:12), எளியவரை மிதித்து மேலே வந்துவிடுங்கள் (ஏசாயா:10:1), மற்றவருக்கு கிடைக்கவேண்டியதை கிடைக்க விடாமல் பிடுங்கித் தின்னுங்கள் (அப்:2:45). நீங்கள் சாகமாட்டீர்கள், சாவாமை அடைவீர்கள், ஆனால் தசமபாகத்தை தவறாமல் தந்து விடுங்கள் (ஏசாயா:1:13). உங்களைத் தேடவில்லை உங்களுடையதையே ஆண்டவர் கேட்கிறார் ஆகையால் அள்ளிக்கொடுங்கள் (2கொரி:12:14) நமக்கு இறைவன் இயேசுவே! ‘இயேசுவுக்கே ஆராதனை’ என்ற பேனரில்தான் இன்றையக் கிறிஸ்தவத்தையும் குடித்து, கும்மாளமடித்து, நிர்வாணப்படுத்தி வைத்திருக்கிறான் சாத்தான் என்பதை எத்தனைபேர் அறிந்திருக்கிறோமோ? தெரியவில்லை.
ஆனாலும் மகிமையின் மேகத்தால் மூழ்கியிருந்த அந்த ஆசரிப்பு கூடாரத்தில், சிநேகிதனைப்போல மோசேயோடு பேசும் ஆண்டவரின் அன்பான வார்த்தைகளை, ஆசாரிப்பு கூடார வாசலிலேயே காத்துக்கிடக்கும் யோசுவா மறந்துவிடுவானா? (யாத்:33:11). மலை அடிவாரத்தின் சற்று தூரத்திலேயே ‘கர்த்தருக்கு ஆராதனை’ என்ற பெயரில் நடந்த அசுத்தங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் யோசுவா அறிந்திருக்கவே இல்லை. அவனுடைய ஆர்வமெல்லாம் மலைக்கு மேலே ஆண்டவர் மோசேயோடு என்ன பேசிக்கொண்டிருப்பார், எப்போது மோசே திரும்ப வருவார், எத்தனை நாட்கள் ஆனாலென்ன?, மாதங்கள் ஆனாலென்ன? வருடங்கள் ஆனாலென்ன? ஆம்! மோசே மலையிலிருந்து திரும்பி வரும்வரை மலை அடிவாரத்திலேயே காத்துக்கிடந்தான் இந்த யோசுவா! (யாத்:32:17)
மோசே திரும்பி வந்தாரா...... வருவதற்கு முன்னமே ஆண்டவர், ஜனங்களின் அத்துமீறல்களை மோசேக்கு அறிவித்துவிட்டார் (யாத்:32:7) கோபத்தினால் ஜனங்களை அழிக்கப் புறப்பட்டார். மோசேயோ, ஆண்டவரின் கால்களை விடாமல் இறுகப் பிடித்து ‘ஆண்டவரே எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இவர்களை விடுவித்து, கானானை சுதந்தரமாக கொடுப்பேன் என்று ஆணையிட்டீரே’ (யாத்:32:13) என்று கெஞ்சினான். ஆண்டவர் இரங்கினார், ‘என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது’ என்றுச் சொல்லி மலையிலிருந்து இறங்கிப் போ என்று மோசேக்கு கட்டளையிட்டார்.
மலையிலிருந்து இறங்கி வந்த மோசே, ஜனங்களின் அசுத்தமான ஆர்ப்பாட்டங்களைக் கண்டான். ஆரோன், அவர்களை நிர்வாணப்படுத்தி வைத்திருந்ததையும், இச்சையினால் வார்ப்பிக்கப்பட்டிருந்த விக்ரகத்தையும் கண்டு, தன் நிதானத்தை இழந்தான். கோபத்தால் கண்கள் சிவந்தான். கையிலிருந்த கற்பனைப் பலகையைத் தூக்கி எறிந்து உடைத்தான். முற்காலத்திலே கோபத்தினாலே கொலையே செய்தவன் (யாத்:2:12). எகிப்தின் சகல சாஸ்திரங்களிலும் டாக்டர் பட்டம் பெற்றவன். அரண்மனையின் ஆடம்பர வாழ்விலே வாழ்ந்து சுகித்தவன். பிசாசின் அடிமைத்தனத்திலிருந்து (எகிப்திலிருந்து) என் ஜனங்களை விடுவித்து, நான் உங்களுக்கு முன் வைத்திருக்கும் கானானுக்கு அவர்களை அழைத்துவருவாயா? என்று, முட்செடியில் இருந்து பேசின, அந்த ஆண்டவரின் அழைப்பிற்கு அடிபணிந்தவனாய், அநித்தியமான உலகத்தின் பாவ சந்தோஷங்களை, ஆடம்பரங்களை, கவர்ச்சிகளை அனுபவிப்பதைப் பார்க்கிலும், தேவ சாயலில் படைக்கப்பட் இந்த அறியாத ஜனங்களை அடிமைப்படுத்தி, துன்பப்படுத்தி வைத்திருக்கும் பிசாசின் கோரப்பிடியிலிருந்து இவர்களை காப்பாற்றுவதையே தெரிந்துகொண்டு (எபி:11:25), தேவ சமூகம் முன்னேச் செல்ல, அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் அவர்களை நடத்தி, போஷித்து வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், ஜனங்களின் பின்மாற்றங்களும், முரட்டாட்டங்களும் அவனைக் கோபப்படுத்தாதா என்ன?
ஆம் உண்மைதானே, வசதியான தேசத்தில், வசதியான வாழ்வை விட்டு வந்த கால்டுவெல், ரேனியஸ், ஜான் தாமஸ், மர்காஷியஸ், ராக்லண்ட், ரிங்கிள் தௌபோ இன்னும் எத்தனையோ பேர், பிசாசின் அடிமைப் பிரதேசத்திற்குள் ஒளியின்றி தவித்த ஜனங்களோடு வாழ்வதையே தெரிந்தெடுத்து, குடிசைகளிலும், குதிரைவண்டிகளிலும் அலைந்து திரிந்து கேட்பாரற்று கிடந்த ஜனங்களை தூக்கிச் சுமந்து, அரவணைத்து, ஆசீர்வதித்து, ஆலயங்களையும், பள்ளிகளையும் தந்து, இன்னமும்; இருளில் இருப்போரை வெளிச்சத்திற்கு கொண்டுவாருங்கள் என்ற மாபெரும் பொறுப்பை நம்மிடம் விட்டுச் சென்றதை, பொறுப்புடன் செயலாற்றின திருச்சபைகளும், மிஷனரி ஸ்தாபனங்களும், மிஷனரிமார்களும் நம்முடைய மூத்த தலைவர்களும், அண்ணன்மார்களும் இருக்க, இன்றைய தலைமுறையினரோ கர்த்தருக்கு ஆராதனை என்ற பெயரில் ஆர்ப்பாட்டங்களையும், அசுத்தங்களையும் அரங்கேற்றிக்கொண்டிருந்தால் கோபம் வராதா என்ன?
அன்று மேசே மலையிலிருந்து இறங்கி வரும்வரை பொறுமை காக்க முடியாத ஜனங்களை, அவசரப்படுத்தி அசிங்கப்படுத்தி வைத்திருந்த அதே பிசாசு, இன்றும் அதையே அரங்கேற்றிக்கொண்டிருக்கிறான். இயேசுவின் இரண்டாம் வருகைக்கு காத்திருக்க மனதில்லாமல், இது அவசரமான உலகம் என்று நம்மையும் அவசரப்படுத்தி, ஆண்டவர் பெயரிலேயே ஆராதனை! ஆசீர்வாதம்! என்று நம்மையும் ஏமாற்றி, நம்முடைய சுய வாழ்வை குறித்தே சிந்திக்க வைத்து, கிறிஸ்துவின் கடைசிக் கட்டளையான நற்செய்தியை அறிவிக்க விடாமல், நீங்களே உலகத்திற்கு வெளிச்சம், உலகத்திற்கு உப்பு, வீட்டிலும், வெளியிலும், ஊரிலும், உலகெங்கிலும் நீங்களே சாட்சி என்ற எந்த சிந்தனையையும் நம்மை சிந்திக்க விடாமல் சுயநலமாகவே வாழவைத்து, நம்மை அலங்கோலப்படுத்தி வைத்திருக்கிறான் இந்த சாத்தான்.
பரிசுத்த வேதாகமத்தை ஏதோ பழைய பஞ்சாங்கமாகவே இன்றைய தலைமுறையினர் பார்க்கின்றனர். வேதாகமத்தின் ஒரு எழுத்தாகிலும் விழுந்துபோவதில்லை (மத்:24:35) என்பது எத்தனை உண்மை! என்பது இவர்களுக்குத் தெரியுமா? வெளிப்படுத்தின விசேஷம் 13:15ல் குறிப்பிட்ட அந்த மிருகம் பேசுமாம், கொலை செய்யுமாம். ஏதோ புரியாத புதிர் போலத் தெரிகிறதா? இந்த வசனம். ஆனால் இன்றைய செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் மனிதர்களுக்கு உண்டான அத்தனை உணர்வுகளோடும் படைக்கப்பட்ட ரோபோ பொம்மை வந்தாச்சு! சீனா, கொரியா, ஜப்பான் தேசங்களில் அது பள்ளிகளிலே பாடம் எடுக்கிறது, ஆலயங்களிலே பிரசங்கம் செய்கிறது, தொழிற்சாலைகளிலே வேலை செய்கிறது, அதுமட்டுமா, ஜனங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. சுயநலத்தையும் வஞ்சகத்தையம் வைத்திருக்கும் மனிதவிஷங்களோடு சேர்ந்து வாழ்வதைவிட எல்லா உணர்வுகளையும் திருப்திப்படுத்தும் இந்த செயற்கை மனிதப் பொம்மையோடு வாழந்தால் என்ன என்று அதையே திருமணம் முடிக்கவும் ஆயத்தமாகிவிட்டான் மனிதன். நம் இந்திய தேசத்தில் ஒடிசா மாநிலத்தில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பதற்கு இந்த ரோபோ பொம்மையை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். வேதத்தில் குறிப்பிட்டபடி அந்தப் பொம்மை (மிருகம்) கொலை செய்யுமா? என்ற கேள்விகள் உங்களுக்கு வரலாம். சீனா தேசத்தில் வேர்ல்ஸ்வோகன் கார் தொழிற்சாலையில் பணிசெய்துகொண்டிருந்த இந்த ரோபோ பொம்மை ஒரு மனிதனை கொலையும் செய்துவிட்டது என்பதே உண்மை! அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது தெரியுமா? ஆம் பரிசத்த வேதாகமம் காலவதியாகிப்போனது என்று பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு, இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று அனைத்தையும், ஆதாரத்துடன் அள்ளி வீசிக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை! ஏனென்றால் ஏற்றக்காலங்களில் நிறைவேற்றிவரும் தீர்க்கதரிசன புத்தகமே இந்த பரிசுத்த வேதாகமம்!
புவி வெப்பமயமாகுதல் எச்சரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. 2.5 டிகிரியை தொட்டுவிட்டது, அட்லாண்டிக் பெருங்கடலின் பனிக்கட்டிகள் உருகி ஓடி வருகிறது. கடல் மட்டம் உயருகிறது. 2030ம் வருடத்தில் வெப்பமயமாகுதல் 3.5 டிகிரியை தொட்டுவிடும்! அப்படியென்றால் அனைத்தும் உருகிப்போகும் என்ற எச்சரிப்பின் அலாரம் அடித்துக்கொண்டேதான் இருக்கிறது. பேதுரு எழுதின 2ம் நிருபத்தில் 3ம் அதிகாரம் 10 வசனத்தில் பூதங்கள் வெந்து உருகிப்போகும் என்று இதைக் குறித்து தெளிவாக குறிப்பிடுகிறார். தேவபக்தியில்லாதவர்கள் அழிந்துபோகும் நாள் வரைக்குமே இந்த வானமும் பூமியும் அக்கினிக்கு இரையாகாமல் காக்கப்பட்டு வருகிறது 2பேது:3:7. இதையெல்லாம் நீங்கள் கேள்விப்படும்போது கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள். அவர் வாசலருகே வந்துவிட்டார் (மத்:24:33) என்பதே நமக்கு கிடைக்கும் செய்தி!
இத்தனை இடறல்களுக்கு இடையிலும், யோசுவா உலக அசுத்தங்களின் ஆர்ப்பாட்டத்தில் தன் கவனத்தை செலுத்தவில்லை, மாறாக மோசேயின் வருகையை எதிர்பார்த்தே காத்துக் கிடந்தான். தேவனின் வார்த்தைகளுக்காய் ஏங்கினான். தேவனும் அவனை நெருங்கினார். மோசேயோடு இருந்தது போல உன்னோடும் இருப்பேன், பலங்கொண்டு திடமனதாயிரு, வேதவார்த்தைகளை மட்டும் விட்டு விலகி விடாதே! கவனமாயிரு! (யோசுவா:1:7) என்று அவன் தோளிலே தட்டிக்கொடுத்தார்.
நம்முடைய கவனம் எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது உலகத்தையா? உன்னதரையா? தாமதிக்கிறார் என்பதினால் வாக்குத்தத்தம் நிறைவேறாது என்பதல்ல, இன்னும் அநேகர் நம் மூலமாய் இயேசுவை அறியவேண்டும், பாவத்திலிருந்து இரட்சிக்கப்படவேண்டும் என்பதாலேயே (2பேது:3:9),
இதோ ஒரு இரகசியத்தை உங்களுக்குச் சொல்கிறேன், நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை, ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது ஒரு நிமிஷத்திலே ஒரு இமைப்பொழுதிலே நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம் (1கொரி:15:51)
மேகங்கள் மேல் அவரோடுகூட ஆகாயத்திலே எடுத்துக்கொள்ளப்பட்டு, எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்!
ஆம்! யோசுவா காத்திருந்தான்! கானானை சுதந்தரித்தான்! நாமும் காத்திருந்தால், பரமக் கானானை சுதந்தரிக்கலாம்!
காத்திருந்தால் சுபம்! சுபமே!
- சாலமோன் ஜெபக்குமார்
(வேதாகம அம்புகள்)
No comments:
Post a Comment